இந்தியாவில் அரசுக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையேயான உறவு ஊசல்

இந்திய ராணுவம் சவால்களை சந்திக்கக் கூடிய தயார் நிலையில் இல்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் வி கே சிங், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மார்ச் மாதம் 12 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள விமான எதிர்ப்பு கட்டமைப்பு 97 சதவீதம் பழுதாகிவிட்டது என்றும், டாங்கிப் படைகளுக்குத் தேவையான குண்டுகள் இல்லை என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடிதக் கசிவு நாடாளுமன்றத்தில் ஆக்ரோஷமான விவாதங்களைக் கிளப்பியது.

இராணுவத் தளபதியின் வயது விவகார சர்ச்சையின் போது அரசு நடந்து கொண்ட வித்தத்தை விமர்சித்திருந்த பிரதான எதிர் கட்சியான பாரதிய ஜனத கட்சியைச் சேர்ந்த அருண் ஜெட்லி, ரகசியக் கடிதங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படுவது அதிர்ச்சியளிக்கும் விடயம் என்றார்.

எதிர்கட்சிகள் ஆவேசம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீதாரம் யெச்சூரி கடித்ததை கசியவிட்ட நபர் கண்டறியப்பட்டு நடவடக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஷிவானந்த் திவாரி இராணுவத் தளபதியின் முறையற்ற நடத்தை காரணமாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஜெனரல் வி கே சிங், தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒருவர் போல பேசுகிறார் என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பீகாரின் முன்னாள் முதல்வர் லலு பிரசாத் யாதவும் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத் தளபதி பிரதமருக்கு கடிதம் எழுதியதை உறுதிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி, பாதுகாப்புக் காரணங்களுக்காக அதில் எழுதப்பட்டிருந்த விடயங்களை வெளியே கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.ஆனால் நாட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதே நேரம் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோர் இந்த சர்ச்சை குறித்து புதன்கிழமை(28.3.12) காலை கூடி விவாதித்துள்ளனர்.

இந்திய இராணுவத்துக்கு 1980களில் வாங்கப்பட்ட வெளிநாட்டு ஆயுதங்களில் பெரும் ஊழல் நடைபெற்றதாக வந்த புகார்கள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக 90களில் இந்திய இராணுவத்துக்கு புதிதாக ஆயுதங்களை வாங்குவது பெருமளவு குறைந்தது.

இதனால் நாட்டின் பாதுகாப்புத் திறணில் குறைபாடுகள் ஏற்பட்டதை கார்கில் போருக்குப் பிறகு அமைக்கப்பட்ட நிபுணர் குழு பதிவு செய்தது. அதே போல நவீன ஆயுதங்களை உள்நாட்டில் தயாரிக்கும் திட்டங்களும் பெரும் முன்னேற்றத்தைத் தராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பெருமளவு ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது.

இறக்குமதி
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாதான் உலக அளவில் அதிகப்படியான ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ள நாடு என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர 126 போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா பிரான்சுடன் தற்போது இறுதி கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசம் ஆண்டுதோறும் அதிகரிக்கும் அதே வீதத்தில் இராணுவ வல்லமையும் வித்தியாசப்படுவது குறித்து இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால் இது போன்ற கருத்துக்களை இராணுவத் தளபதி பாதுகாப்பு அமைச்சரிடம் முறையிடாமல் நேரடியாக இந்தியப் பிரதமரிடம் தெரிவித்தது முறையான செயலா என்ற கேள்வி பலரால் தற்போது ஏழுப்பப்படுகிறது.

இராணுவத்தின் தயார் நிலை குறித்து கடந்த அரசின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலேயே பல கடுமையான கருத்துக்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் – இராணுவத் தளபதியின் கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை விட – அதை தெரிவிக்க அவர் கையாண்ட உத்தியே பெரும் அதிர்ச்சியை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply