இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் : பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பொறுத்தவரை, அந்த விடயத்தில் இலங்கை வெளிநாட்டுத் தலையீட்டை என்றும் அனுமதிக்காது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”இந்த விவகாரத்தில் வெளிநாட்டு தலையீட்டை இலங்கை என்றும் அனுமதிக்காது. இந்த நிலைப்பாடு என்றும் நிலையாக இருக்கும். இதுதான் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு.” என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விவகாரத்தை கையாள இலங்கை தனக்கே உரிய உள்ளூர் பாணியை கடைப்பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களிக்க நேர்ந்தது என்றூம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த ஒரு நாடு தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், கூட்டுப் பொறுப்பு காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து தீர்மானத்தை ஆதரித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐநாவின் மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு எதிராக ஒரு எதிர்மறையான கருத்து தோன்றியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

அமெரிக்க காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கூட மனித உரிமைக் கவுன்ஸில் ஒரு அரசியலாக்கப்பட்டு விட்டது என்ற கருத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஊடகங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த

இதற்கிடையே, ஒரு வைபவம் ஒன்றில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஊடகங்கள் எதிர்மறையாக அல்லாமல் நல்ல விசயங்களையே சொல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார். குறிப்பாக தமிழ் ஊடகங்கள் இனவாதம் பேசக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply