தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதிமுக நலனுக்கு எதிராகவும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கைகள், 24 ஆண்டுகள் வாழ்ந்த ஜெயல்லிதாவின் இல்லத்திலிருந்து வெளியே வந்தபிறகுதான் தனக்குத் தெரியவந்ததாகவும் சகிகலா குறிப்பிட்டிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம், சசிகலா மற்றும் அவரது உறவினர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சசிகலா கணவர் நடராஜன், உறவினர் ராவணன் உள்ளிட்டோர், நில அபகரிப்பு, பண மோசடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும், கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகங்களில் அவர்கள் பெருமளவு ஆளுமை செலுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply