இலங்கை வரும் இந்திய குழு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை ஆராயக் கூடாது: ஜாதிகஹெல உறுமய
இலங்கை வரும் இந்திய சர்வகட்சிகளின் பாராளுமன்ற தூதுக் குழுவினர் வடக்கு மக்களின் விடயங்களையோ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவோ ஆராயக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்டமையாலேயே இலங்கையில் யுத்தம் ஏற்பட்டது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து தமிழ் மக்களும் பாரியளவிலான அழிவுகளை சந்தித்தனர். இவ்வாறானதொரு பேரழிவுகளை மீண்டும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு இந்தியா உருவாக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,
சர்வ கட்சிகளும் உள்ளடங்கிய இந்திய பாராளுமன்றக் குழுவினர் இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றனர். இவர்களது வருகையானது எந்த வகையிலும் உள்நாட்டின் தேசிய அரசியலை பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது. ஏனெனில் இந்தியாவிற்கு இலங்கை விடயங்களில் தலையிட உரிமையோ அதிகாரமோ கிடையாது. இலங்கை ஒரு போதும் காஷ்மீர் விடயத்திலோ தமிழ் நாட்டு அரசியலிலோ தலையிட்டது இல்லை.
வன்னி மக்களின் விடயங்களை ஆராய்வதாக கூறி உள்நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த இலங்கை வரும் பாராளுமன்றக் குழு முயற்சிக்கக் கூடாது. நாட்டில் பெரும் பின்னடைவுகளை சந்திக்க மூல காரணமாக இருந்த புலிகளுடனான யுத்தம் ஏற்பட இந்தியாவின் தலையீடு முக்கியமானதாக அமைந்திருந்தது. இதனை அனைவரும் அறிவர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்பது உள்நாட்டு விவகாரம் இதனை ஆராய வெளிநாடுகள் முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை வரும் இந்திய தூதுவர் குழு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்நாட்டு விடயங்களில் தலையிடவோ அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கவோ முயற்சிக்க கூடாது எனக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply