வவுனியா மனிக்பார்மில் இந்திய நாடாளுமன்றக் குழு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்
இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்று காலை வவுனியா மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாமுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். முன்னதாக இரண்டு உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இக்குழுவினரை வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் வரவேற்று அழைத்துச் சென்று இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகள் என்பன குறித்து விளக்கமளித்தார்.
இறுதி யுத்தத்தையடுத்து, மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்ட 3 லட்சம் மக்களில் 6000 பேர் மாத்திரமே இன்னும் இங்கு மிஞ்சியுள்ளதாகவும், ஏனையோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியக் குழுவினரிடம் கூறினார்.
இறுதி மோதல்கள் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் செறிவாக உள்ள கண்ணிவெடி அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஜுன் மாத இறுதியில் மனிக்பாமில் எஞ்சியுள்ள மக்களும் குடியேற்றப்பட்டுவிடுவார்கள் என்றும் வவுனியா அரச அதிபர் தெரிவித்தார்.
மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்விட வசதிகள், அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்திய நாடாளுமன்றக் குழுவினர் வவுனியா அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வன்னிப்பிரதேச ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர் மனிக்பார்ம் கதிர்காமர் முகாமில் உள்ள மக்களையும் இக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினார்கள். ”முகாம் வாழ்க்கை கடினமானதென்றும் தங்களைத் தமது சொந்த கிராமங்களில் விரைவில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஆவன செய்து உதவுமாறும்” முகாம் மக்கள் இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடம் கோரினர்.
இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட 89 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களைக் கையளித்துள்ளனர். அங்கு மீள்குடியேற்றப் பகுதியில் உள்ள மக்களைச் சந்திப்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply