வன்னியிலிருந்து பெருமளவான மக்கள் வெளியேறி வருகின்றனர்

வன்னியிலிருந்து தொடர்ந்தும் பெருந்தொகையான மக்கள் வெளியேறி வருகின்றனர். வன்னியிலிருந்து வெளியேறிய 339 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். 
 
யாழ்ப்பாணம் சென்றடைந்த இவர்கள் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக யாழ் செய்தியாளர் அறியத்தருகிறார்.

வன்னியிலிருந்து வரும் மக்களை சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் முகாம்களில் தங்கவைக்குமாறு சாவகச்சேரி நீதவான் ராம் சங்கர் பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டார்.

வன்னியிலிருந்து வரும் மக்கள் ஊடாக நோய்த்தொற்றுக்கள் பரவுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

வன்னியிலிருந்து வெளியேறிய மக்களில் ஒரு தொகுதியினர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், அங்கு இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில் வன்னியிலிருந்து வந்திருக்கும் ஏனைய மக்களையும் அங்கு தங்க வைப்பதாயின் மேலதிகமான இடமொதுக்கப்பட வேண்டிய தேவையிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்திருக்கும் மக்களை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்தநிவாரணத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

வவுனியாவில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அரசாங்க அதிபர்களுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply