யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை : கருணா அம்மான்

யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.
 
அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் படை நடவடிக்கைகள் குறித்தும் இந்திய அரசாங்கம் நன்கு உணர்ந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் நலன் குறித்தே இந்திய அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இன்று இலங்கை வரவுள்ள நிலையிலேயே விநாயகமூர்;த்தி முரளீதரன் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றிய பின்னர் வடக்கில் மாகாணசபை தேர்தலொன்றை நடத்துவதே சாத்தியமானதாக அமையும் எனக் கூறினார்.

13வது திருத்தச் சட்டமே அரசின் நிலைப்பாடு

யுத்தத்தின் பின்னர் 13ஆம் திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கலாம் என வினாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டார்.

இதன் பின்னர் அதிகாரப்பகிர்வு குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடலாம் எனவும் தெரிவித்த அவர், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் இந்தியா ஆர்வத்துடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வு தொடர்பாக சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஆராய்ந்து வருகின்றபோதிலும் இன்னும் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்ட அவர், முல்லைத்தீவையும் படையினர் கைப்பற்றிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சர்வ கட்சி பிரதிநிகள் குழுவில் இணைந்துகொள்வார்கள் எனக் கூறினார்.

எதிர்ப்புத் தெரிவிப்பது ஒருபோதும் தீர்;வாக அமையப்போவதில்லை, அத்துடன் அரசாங்கத்திடமிருந்து எமது மக்களுக்காக எவற்றையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது. எனவே செயற்பாடுகளில் நாமும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் விநாயகமூர்த்தி முரளீதரன் அழைப்புவிடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply