தமிழின் பெருமை பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை!
தமிழ் தோன்றிய காலத்தில் வேறு எந்த மொழியும் பிறக்கவில்லை. “ஞாயிறும் இருளைப் போக்குகிறது, தமிழும் இருளைப் போக்குகிறது’ என்று பாடல் ஒன்று உள்ளது. உயர்ந்தோர் தொழ விளங்கிய தமிழ், உயர்ந்த மொழி. எனினும் தமிழின் பெருமை குறித்துப் பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை என இந்திய பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உலக புத்தகத் தினத்தையொட்டி கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னையில் இடம்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
பிறமொழியில் உள்ள வல்லவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் தமிழர்களிடம் உள்ளது. அவர்களது மொழிக் கருத்துகளை தமிழ் மொழியின் கருத்துகளுடன் ஒப்பிட்டால் தமிழ்தான் சிறந்தது என்பது தெரியவரும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதியாரே கூறியுள்ளார் என்பதை நாம் நினைவுகூற வேண்டும்.
பாரதியாரிடம் அன்று தமிழ் உணர்வு உயர்ந்திருந்தது. ஆனால் இப்போது அந்த உணர்வு தமிழர்களிடம் குறைந்துவிட்டது. குறைந்து வரும் தமிழ் உணர்வை மீண்டும் வளர்க்க அறிஞர்கள் முயற்சி செய்யவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : ஒலி-ஒளி செய்திகள், கவிதைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply