இரண்டரை மாதங்களில் மோதல்கள் முடியும்: ஜனாதிபதி

தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்கள் இன்னமும் இரண்டரை மாதங்களில் முற்றாக முடிவடைந்துவிடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார். 
 
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உள்ளிட்ட குழுவினர் தற்பொழுது 20 கிலோ மீற்றர் முதல் 30 கிலோ மீற்றர் வரையான பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாக, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு நேற்று வழங்கிய இராப்போசன விருந்துபசாரத்தின் போது ஜனாதிபதி கூறினார்.

கடந்த சில நாட்களில் விடுதலைப் புலிகள் 1000 கிலோ மீற்றர் பரப்பு நிலத்தை இழந்துவிட்டனர். முல்லைத்தீவு நகரம் மட்டுமே அவர்களிடம் தற்பொழுது உள்ளது. விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்களை நடத்துவதற்குச் சந்தர்ப்பம் வழங்காமல் பாதுகாப்புத் தரப்பினரால் நான்கு திசைகளிலிருந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றார் அவர்.

தமது கட்டுப்பாட்டிலுள்ள மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்காத விடுதலைப் புலிகள், ஒவ்வொருவரிடமும் 100,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டே விடுதலைப் புலிகள் பொதுமக்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியேற அனுமதிக்கின்றனர் என ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.

அதேநேரம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 300,000 பேர் இருப்பதாகக் கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லையெனவும், 100,000ற்கும் குறைவான மக்களே அங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரபாகரன் இன்றி இலங்கை என்ன செய்யப் போகிறது என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குச் சிரித்துக்கொண்டு பதிலளித்த ஜனாதிபதி “என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, எம்.ரி.வி.,எம்.பி.சி. நிறுவனம் தீயிடப்பட்டமை மற்றும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என ஜனாதிபதி, வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளை நடத்துமாறு தான் பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply