அரசிற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா? சனிக்கிழமை தெரிய வரும்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 28ம் திகதி இடம்பெறவுள்ளதாக அதன் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தம்புள்ளை பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தம்புள்ளை பிரச்சினையை தீர்த்து வைக்க அரசாங்கம் முன்வராத நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு அளிப்பதா? என்பது தொடர்பில் இக்கூட்டத்தில் பெரும்பாலும் கேள்வி எழுப்பப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்புள்ளை பிரச்சினையை வைத்துக் கொண்டு சில அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுத்து வருவதாகவும் தங்களது அரசியல் இருப்புக்கு அதனை பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலும் அதன் அருகிலுள்ள ஒரு காளி கோவிலும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று பௌத்த பிக்குகள் போராடி வருகின்றனர்.

அப்பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாவிட்டால், அது பலவந்தமாக அகற்றப்படும் என்று பிக்குகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் இலங்கையின் மிகப்பெரிய முஸ்லிம் கட்சியும் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இச்சம்பவம் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், அந்தப் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் மீது அழுத்தங்களை கொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை காப்பாற்ற முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள், நாடுகள் முன்னிற்கு உழைத்ததாகவும் அது அவ்வாறிருக்க கேவலம் ஓரிரு பிக்குகள் கிளப்பியுள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு அரசாங்கத்தால் தீர்வு வழங்க முடியாவிட்டால் இனியும் அவர்களுடன் இணைந்திருந்து என்ன பயன் என்ற கேள்வி பெரும்பாலும் இந்த கூட்டத்தின்போது எழுப்பப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply