முறையான ஜனநாயகம் வேண்டி மலேசியாவிலும் போராட்டம்!
மலேசியாவின் தேர்தல் சீர்திருத்தம் கோரும் பெர்சே இயக்கத்தின் எழுச்சி மிக்க பேரணி இன்று தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
மலேசியாவில் தேர்தல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கை.
மலேசியாவின் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டுக்குள்ளாகவே தேர்தல் நடத்தப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டத்தோ அம்பிகா சீனிவாசன் தலைமையிலான பெர்சே அமைப்பு தேர்தல் சீர்திருத்தம் மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோலாலம்பூரில் பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. இதில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றோர் மஞ்சள் நிற சட்டைகளை அணிந்திருந்ததால் எங்கும் மஞ்சள்மயமாக காட்சியளித்தது.
முன்னதாக பேரணியை மெர்டெக் சதுக்கத்தில் நிறைவு செய்ய பெர்சே அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பேரணியின் முடிவில் பெர்சே அமைப்பினர் மெர்டெக் சதுக்கத்தில் நுழைய முயற்சித்தனர். இதனால் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களைக் கலைந்து செல்ல வைத்தனர்.
மெர்டேக் சதுக்கம் நோக்கி நகர்வதற்கு முன்பாக கூட்டத்தினரிடையே பேசிய பெர்சே கூட்டமைப்பின் தலைவர் அம்பிகா சீனிவாசன்இ நேர்மையான தேர்தலையே நாம் விரும்புகிறோம் என்றார்.
இப்பேரணியில் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமும் கலந்து கொண்டார்.
மலேசிய இந்துக்கள் அமைப்பான ஹிண்ட்ராப்பும் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதே கோரிக்கைகளை முன்வைத்தே பெர்சே அமைப்பானது 2007-ம் ஆண்டிலும் 2011-ம் ஆண்டிலும் மலேசியாவை உலுக்கும் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply