ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் தொடரும்வரை டெசோவுக்கான தேவை இருக்கிறது – சுப வீரபாண்டியன்

தனி ஈழம் குறித்து தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உலக அரங்கிலும் முன்னெடுப்பதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டிருப்பதாக டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவருமான சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

1980களில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட டெசோ என்று பரவலாக அழைக்கப்பட்ட தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு திடீரென மீண்டும் திமுக தலைவர் மு கருணாநிதியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எண்பதுகளில் தனி ஈழத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத குழுக்கள் இலங்கைக்குள் போராடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான தமிழ்நாட்டின் ஆதரவை ஒன்று திரட்டும் முகமாக உருவாக்கப்பட்ட டெசோ அமைப்புக்கு இன்றைய தேவை என்ன என்கிற கேள்விக்கு பதிலளித்த சுப வீரபாண்டியன், ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டம் தொடரும்வரை டெசோவுக்கான தேவையும் இருக்கிறது என்றார்.

2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இறுதிப்போரின்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதன் தலைவருமான மு கருணாநிதியும் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், இப்போது எதிர்கட்சி வரிசையில் இருக்கும்போது மட்டும் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அதி தீவிர நிலைப்பாடு எடுப்பது அரசியல் சந்தர்ப்பவாதமாகாதா என்கிற கேள்விக்கு பதிலளித்த சுப வீரபாண்டியன், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திமுக எந்த நடவடிக்கையும் எடுத்துவிடக்கூடாது என்கிற உள்நோக்கத்துடன் செயற்படுபவர்கள் தான் இப்படியான குதர்க்கமான கேள்வியை எழுப்புவதாக குற்றம் சாட்டினார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், தனித்தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் மற்ற கட்சிகள் மற்ற இயக்கங்களும் போராடுவதை தாங்கள் தடுக்கவில்லை என்றும் அதிமுக உள்ளிட்ட மற்ற தமிழ்நாட்டு கட்சிகளும் அவரவர் மட்டத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply