வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக காலத்தை கழிக்கும் அவலகம்!
போரின் போது கணவன்மாரை இழந்த 90 ஆயிரம் வரையான பெண்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்வதாக இங்கிலாந்து வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணாமல் போனவர்கள், கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, யுத்த மீறல்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படாததாக சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பாக, இலங்கை பொலிஸார் எந்தவொரு முறைப்பாடுகளையும் பதிவு செய்ய மறுப்பதாகவும் இங்கிலாந்து வெளியுறவுப் பணிமனையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் நடமாட்டம் அங்குள்ள பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இலங்கை அரசாங்கம் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் எந்தவொரு குறைந்த முன்னேற்றத்தைக் கூடக் காண்பிக்கவில்லை என இங்கிலாந்து அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகள் குழுவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் பெண்களின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பிட்டுள்ள இங்கிலாந்து அறிக்கைஇ உலக பொருளாதார மன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட பூகோள பால்நிலைச் சுட்டியில் 16 ஆவது இடத்திலிருந்த இலங்கை தற்போது 31 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் 2011 முழுமையும் மனித உரிமைகள் தொடர்பிலும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும, இலங்கையில் மனித உரிமையை பாதுகாத்தல் என்பது கடந்த ஆண்டில் கேள்விக்குறியாக காணப்பட்டதாகவும் இங்கிலாந்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply