இந்திய ஜனாதிபதி தேர்தல்: கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரணாப் முகர்ஜி
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகிவரும் நிலையில் அவரை ஆதரிப்பதாக வெளிப்படையாகவே கூட்டணிக் கட்சிகள் அறிவித்திருப்பது டெல்லி அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியே வேட்பாளராக இருப்பார் என்கிற வகையில் ஊடகங்கள் அனல் பறக்க விவாதங்களை முன் வைத்து வருகின்றன. இருப்பினும் பிரணாப்பை நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து கட்சிப் பொறுப்பிலிருந்தும் விடுவித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தினால் ஏற்படும் இழப்புகளை காங்கிரஸ் கட்சி கணக்கிட்டு ஒரு ஊசலாட்டமான போக்கில்தான் காங்கிரஸ் இருந்து வந்தது.
இந்நிலையில் கூட்டணிக் கட்சியான திமுகவின் கருணாநிதி முழுவதுமாக பிரணாப்பை ஆதரிக்கிறார்- சரத்பவாரும் பிரணாப்பையே ஆதரிக்கிறார் என்பதால் நேற்று இரவு சோனியாவுடனான சந்திப்பின் போது மமதா பானர்ஜியிடமும் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் பிரணாப்பை முன்னிறுத்தும் மனநிலைக்கு காங்கிரஸ் வந்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியைப் பொறுத்தவரையில் அங்கு மையம் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளருக்கான புயல் மெல்ல மெல்ல கரையைக் கடப்பதுபோல் இப்போது பிரணாப் முகர்ஜி என்ற ஒற்றை மனிதரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒருபக்கம் ஊசலாட்டமான நிலையில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகள் விடுவதாக இல்லை என்ற நிலையே இப்போது.
குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திமுக தலைவர் கருணாநிதி ஏற்கெனவே ஆதரித்திருக்கிறார்.
மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸும் வெளிப்படையாகவே பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் புதிய திருப்பமாக ராஷ்டிரிய லோக்தளத்தின் அஜித்சிங்கும் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply