40 ஆண்டுகளில் முதற்தடவையாக அணுமின் இல்லாத ஜப்பானை வரவேற்ற மக்கள்
ஜப்பானில் இயங்கிவந்த கடைசி அணு உலையும் தற்போது நிறுத்தப்படுகிறது.
அணு சக்தி இல்லாத ஜப்பானை வரவேற்கும் பேரணியில் 5000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய விடயங்கள்
ஹொக்கொய்டோ நிர்வாக எல்லையில் அமைந்துள்ள டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலைதான் பழுதுபார்க்கும் பணிக்காக இப்போது மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணு மின்சாரமின்றி இயங்குகின்றது.
கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்சக்தி தேவையில் 30 வீதத்தை அணுமின் மூலமே பெற்றுவந்தது.
ஜப்பானின் இந்த நடவடிக்கையை வரவேற்கும் முகமாக தலைநகர் டோக்யோவில் ஊர்வலம் நடத்திய நூற்றுக்கணக்கானவர்கள், தமது நாட்டில் அணு சக்திக்கு இடமில்லை என்ற நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வாசகங்களை ஏந்தியிருந்தனர்.
ஃபுக்குஷிமா அழிவைத் தொடர்ந்து, ஜப்பான் அதன் அணு உலைகளை பழுது பார்க்கும் தேவைக்காக படிப்படியாக மூடிவந்தது.
பூமியதிர்ச்சிகளோ சுனாமியோ ஏற்பட்டால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை ஆராய்வதற்காக அதிர்வுச் சோதனைகளை அதிகாரிகள் நடத்திவருகின்றனர்.
அதேவேளை, மூடப்பட்டுள்ள அணுமின் நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டுமானால் அந்தந்த உள்ளூராட்சி நிர்வாகங்களின் அணுமதியைப் பெறவேண்டும் என்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுவரை அப்படி எந்த உள்ளுராட்சி நிர்வாகங்களும் அனுமதி வழங்கியதாகத் தெரியவில்லை.
மேற்கு ஜப்பானிலுள்ள ஓஹி அணுமின் நிலையத்திலுள்ள இரண்டு உலைகள் பாதுகாப்பானவை என்றும், நாட்டில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சனையைத் தீர்க்க அவற்றை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று அரசு கூறிவருகிறது.
ஆனால் உள்ளூராட்சி நிர்வாக அதிகாரிகள் இன்னும் அதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை.
ஜப்பான் பெரும் மின்சாரப் பற்றாக்குறை பிரச்சனையால் திண்டாட வேண்டிய நிலை ஏற்படும் என்று அமைச்சர்கள் எச்சரித்துவருகின்றனர். ஆனால், மக்களின் விருப்பத்துக்கு மாறாக செல்வதற்கும் அரசு தயாராக இல்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply