ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஹிலாரியிடம் நாளை கிருஷ்ணா பேசுவார்?
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், அரசியல் தீர்வு குறித்த பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனிடம் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கமளிக்கவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
நாளை 8ம் திகதி அவர் புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
கிருஷ்ணாவை அவர் சந்திக்கும்போது ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கியமாக பேசப்படும் என்று தெரிகிறது.
ஐநா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அதை பெரும் தயக்கம், இழுபறிக்குப் பின்னர் இந்தியா ஆதரித்தது.
இருப்பினும் அதன் பின்னர் இலங்கையை சமரசப்படுத்தும் வேலைகளில் இந்தியா தீவிர கவனம், அக்கறை காட்டி வருகிறது. இந்த நிலையில் ஹிலாரி கிளிண்டனிடம் இலங்கை விவகாரம் குறித்து கிருஷ்ணா பேசவுள்ளார்.
அப்போது இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள், அரசியல் தீர்வு குறித்த பிரச்சினை உள்ளிட்டவை குறித்து கிருஷ்ணா விளக்கி விவாதிப்பார் என்று தெரிகிறது.
ஹிலாரியுடன் இலங்கை விவகாரம் குறித்து கிருஷ்ணா பேசுவார் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply