தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வழங்காத இலங்கை தொழிற்சாலைகள்: லண்டன் ஊடகம் குற்றச்சாட்டு
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவின் போது பிரிட்டன் பிரித்தானிய விளையாட்டு வீரர்கள் அணியவுள்ள ஆடைகள் இலங்கையில் அடிப்படை தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பிரித்தானிய அணிக்கான அதிகாரபூர்வ ஆடைகளை பிரித்தானியாவிலுள்ள நெக்ஸ்ட் ஆடை விற்பனை நிறுவனம் வெளியிட்டு சில நாட்களுக்குள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் லண்டனிலிருந்து வெளியாகும் தி இன்டிபெண்டன் நாளிதழில் வெளியாகியுள்ளன.
ஆடை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நெக்ஸ்ட் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள தொழிற்சாலையில் அடிமட்டச் சம்பளத்திற்கு, அளவுக்கதிகமான மேலதிக நேரத்திற்கு, கணக்குவழக்கு இல்லாத அளவுக்கு தொழிலாளர்களிடம் வேலை வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலை ஊழியர்களின் நலன்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டாளரிடம் பிபிசி வினவியது
ஓர் உலகளாவிய விளையாட்டுப் போட்டியில் உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கும் நிறுவனத்தின் தகைமையை கேள்விக்குட்படுத்தக் கூடிய இந்தக் குற்றச்சாட்டை நெக்ஸ்ட் நிறுவனம் மறுத்திருக்கிறது.
அதேவேளை, அது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துவதாகவும் அந்த நிறுவனம் உடன்பட்டிருப்பதாக தி இண்டிபெண்டன் நிறுவனத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் பிரபல நிறுவனங்களின் 8 தொழிற்சாலைகளில் பரவலான தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்ற நிலைமையே இருப்பதாக ப்ளே ஃபெயார் 2012 என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ள குழுவினர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.
நெக்ஸ்ட் நிறுவனத்தின் இலங்கைத் தொழிற்சாலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் லண்டன் 2012 என்ற ஒலிம்பிக் விழாவுக்கான ஆடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் அளவுக்கதிமான மேலதிக நேரத்திற்கு வேலை வாங்கப்படுவதாக அங்கு பணிபுரிபவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply