பாதுகாப்பான போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட வேண்டும்: யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்
முல்லைத்தீவில் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்குவதற்கு ஏ34, ஏ35 பாதைகளை அரசாங்கம் திறக்க வேண்டும் என யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் பாதைகளைத் திறப்பதாக அரசாங்கம் அறிவித்தால் பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியும் எனவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகதிகள் தங்குவதற்கு பாதுகாப்பான பகுதியொன்றை முல்லைத்தீவில் உருவாக்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாட்டாக இருப்பதாகவும், ஆனால் அப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இருக்கும் நிலையில் இங்கு பாதுகாப்பான பிரதேசமொன்றை உருவாக்குவது பாதுகாப்பற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஆனையிறவு மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பான பகுதிகளுக்கு அவர்கள் செல்வார்கள் எனவும் அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வதை விடுதலைப் புலிகள் தடுப்பதாகவும் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமைகள் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஆயர், பொதுமக்கள் எவரும் உணவு எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லையெனவும், இப் பகுதிகளில் உலக உணவுத் திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிரதேசத்திலுள்ள அரசாங்க அதிபர் காரியாலயம் ஆகியன இவர்களுக்கான உணவினை வழங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இப் பகுதிகளுக்கு அண்மையில் 90 லொறிகளின் உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையில் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டபோதிலும் பொதுமக்களுக்கு இன்னும் உணவு தேவைப்படுவதாகவும் செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் எங்கு சென்று மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதென்பதறியாது பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், இந்த நிலைமையே பாதுகாப்பான பாதையொன்றைத் திறப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply