பராக் ஒபாமா அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுமாம்

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள்.

கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது.

ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.

உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள்.

வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply