புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் வரட்டு கெளரவமும் பிடிவாதமுமே தமிழர்களுக்கு பேரழிவைத் தேடித்தந்தது
புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமுமே தமிழ் மக்களுக்கு அழிவைத் தேடித் தந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் வட பகுதியை புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்களே நன்மை அடைவர்.
இதனூடாக சிங்கள மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை. தமிழ் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என வும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்தினரின் பொய்ப் பிரசாரங்களை நம்பி அவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர் புலிகள் இயக்கத்தினர் அழிவின் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறினார். ரன்பிம (தங்க பூமி) காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் அலரி மாளிகையில் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாறுகையில், இலங்கையில் தமிப்ழம் அமைக்க முடியாது. அவ்வாறு அமைக்கப்படு வதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாது. அதனால் சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசிப்போம் என புலிகள் இயக்கத் தலைவருக்கு எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் அந்த யோசனையை நிராகரித்ததுடன், யுத்தத்தின் மூலம் தமிப்ழம் அமைக்கலாம் எனப் பிடிவாதமாக இருந்தார். அதனால் நான் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி னேன்.
புலிகள் இயக்கத்தில் 22 வருடகாலம் உறுப்பினராக இருந்த நான், அக்காலம் முழுவதும் யுத்தக் களத்திலேயே இருந்தேன். ஆனால் புலிகள் இயக்கத் தலைவர் ஒருபோதுமே யுத்த களத்திற்கு வந்திராதவராவார். அவர் ஒரு மாயை. அவரது வரட்டு கெளரவமும், பிடிவாதக் குணமும்தான் தமிழ் மக்களுக்கு, அழிவையும், துன்பங்க ளையும் தேடிக் கொடுத்தது. அதனால்தான் அவரை தமிழ் மக்களில் 95 சதவீதமானோர் நிராகரித்துவிட்டனர்.
பாதுகாப்புப் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்ததன் பயனாக அங்கு மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள். பாரிய அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் கிழக்கு உதயம் திட்டம் ஊடாக அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வேளையில், வடபகுதியை வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அதனால் இந்நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களும் அன்னாரின் கரங்களைப் பலப்படுத்துவது காலத்தின் அவசியத் தேவையாகும்.
பொய்ப்பிரசாரம் செய்வதில் புலிகள் வல்லவர்கள். இதனை வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தைப் போன்று மீண்டும் கெரில்லாப் போராட்டம் நடத்தக்கூடிய சூழல் இங்கு கிடையாது. ஆரம்ப காலத்தைப் போன்று புலிகள் இயக்கத்தினருக்கு இப்போது தமிழ் மக்களின் ஆதரவும் கிடையாது. அவர்கள் தமிழ் மக்களுக்கு அழிவையும், துன்பங்களையும் தேடிக் கொடுத்திருப்பவர்கள்.
இதே நேரம் பாதுகாப்புப் படையினர் தொழில்நுட்ப ரீதியாக இப்போது பாரிய வளர்ச்சி அடைந்துள்ளனர். கெரில்லா போராட்டத்தின் மூலம் இவ்வளர்ச்சிக்கு முகம் கொடுக்க முடியாது. அதனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டுத் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தின் ஊடாக நிதியுதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply