இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு இல்லை: அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்

மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 800 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை அனுப்புவதாக இந்தியா அறிவித்துள்ள போதும், நாட்டில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டமும் இணைந்து 3,000 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை வன்னிக்கு அனுப்பிவைத்திருப்பதாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உணவுப் பொருள்கள் வேண்டியளவு களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.திவாரட்ண கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.எனினும், இந்தியா இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பவிருப்பதாகக் கூறப்படுவது பற்றித் தனக்கு எதுவும் தெரியாதென திவாரட்ண தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளைப் போன்று இலங்கையில் மக்கள் பட்டிணியால் வாடவில்லையெனவும், வன்னியில் தற்பொழுது போதியளவு அரிசி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 4000 மெற்றிக்தொன் அரசி உள்ளது. அவை கூடுதலான வயல் நிலங்களைக் கொண்ட மாவட்டங்கள். அந்தப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் தமது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யமுடியாதுள்ளனர்” என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், வன்னியில் பாம்புக்கடி அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், விஷக்கடிகளுக்கான மருந்துப் பொருள்களை அனுப்பிவைத்திருப்பதாகக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply