வன்னி மக்களைப் பாதுகாக்கக் கோரி யாழ் குடாநாட்டில் அமைதிவழிப் போராட்டங்கள்
வன்னியில் ஏற்பட்டிருக்கும் மனிதப் பேரவலத்தைத் தடுக்குமாறு கோரி யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார், துறவிகள் இணைந்து அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
இந்தப் போராட்டம் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் நடைபெறவிருப்பதாக யாழ் செய்தியாளர் அறியத்தருகிறார். வன்னியில் அதிகரித்திருக்கும் படுகொலைகள், இடப்யெர்வுகள் உள்ளிட்ட மனித அவலத்தை உரிய தரப்பினர் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி நாளை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
சமய மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற போராட்டங்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வன்னியில் மக்களுக்கு நேர்ந்திருக்கும் மனித அவலத்தை தடுக்கக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்திருக்கும் வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்கிழமையும் தொடர்கிறது.
வன்னியில் நடைபெற்றுவரும் மோதல்களில் அங்கிருக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களைக் கண்டித்தே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதியிலுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பாக கவலையுற்றிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் உளரீதியாகப் பாதிப்புற்றிருப்பதாகவும், இதனால் வன்னியில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இரண்டு தரப்பினரும் முன்வர வேண்டுமெனவும் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply