சுதந்திர தினத்துக்கு முன் முல்லைத்தீவு மீட்கப்படும்:அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த
சுதந்திர தினத்திற்கு முன் முல்லைத்தீவும் முழுமையாக மீட்கப்படும். வடக்கு உட்பட சகல நிலப் பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்ட இலங்கையிலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.படையினர் முல்லைத்தீவு நகரினைக் கைப்பற்றி யுள்ளனர். இன்னும் சிறு பகுதியே மீட்கப்படவேண்டி யுள்ளது. சுதந்திர தினத்திற்கு முன் இது மீட்கப்பட்டு விடுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள ஐந்து மாவட் டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறுவது உறுதியெனவும் தெரிவித்தார். மேற்படி ஐந்து மாவட்டங்களிலும் 40 பிரதேச சபைகள் உள்ளன. இச்சகல பகுதிகளிலும் அரசாங்கமே வெற்றிபெறுமெனவும் அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இரு மாகாண சபை பிரதேசங்களிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களென மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்றனர். இதற்கமைய அபேட்சகர் பட்டியலும் இன விகிதாசாரத்தை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாகாண சபைகளிலும் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அவர் அதனை ஆதாரத்துடன் கூறவில்லை. எவரும் இதனை ஏற்கமாட்டார்கள்.
மத்திய மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக எஸ்.பி. திசாநாயக்க பேசி வருகின்றார். மத்திய மாகாணத்தில் அரசாங்கம் 3,779 தமிழ் ஆசிரியர்களையும், 600 முஸ்லிம் ஆசிரியர்களையும் நியமித்துள்ளது. அவர் சமுர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் எத்தனை பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கினார் எனக் கூறட்டும் பார்க்கலாம்.
மத்திய மாகாணத்தில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மும்முரமாக முன்னெடுக்கிறது. நாட்டின் சகல பகுதியும் அரசாங்கத்தின் கீழ் இருக்கும்.
அனைத்துப் பிரதேசங்களும் அபிவிருத்திக்குள்ளாக்கப்படும் எனவும் அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply