வன்னி மக்கள் மீளக்குடியேற்றப்பட்டாலே இராணுவ வெற்றி முழுமையடையும்: ஐ.தே.க.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டாலே இராணுவ வெற்றி பூரணமடையும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வடபகுதியை முழுமையாக மீட்பதற்கு இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றபோதும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
“வன்னி மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதாகக் கூறுப்படுகிறது. எனவே, அம்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அவ்வாறு மீளக்குடியமர்த்தப்பட்டாலே இராணுவ வெற்றி முழுமையளிக்கும்” என்றார் அவர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டிருக்கும் பகுதிகளில் துரித கதியில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மோதல்கள் 98 சதவீதம் முடிவடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய திஸ்ஸ அத்தநாயக்க, அவ்வாறெனின் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய பெற்றோல் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடியும் எனக் கூறினார்.
அத்துடன், முல்லைத்தீவை இராணுவத்தினர் மீட்டமைக்கு நன்றி தெரிவித்து நாடளாவிய ரீதியில் தமது கட்சி சமய நிகழ்வுகளை நடத்தவிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply