நான்கு நீர்மூழ்கிகள், டோரா ரக தற்கொலைப்படகுகள்,அதி நவீன கட்டடத் தொகுதிகள் படையினர் வசம்: பிரிகேடியர் உதய நாணயக்கார
முல்லைத்தீவு முழுவதையும் புலிகளிடமிருந்து விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளுக்குச் சொந்தமான மிகப் பெரிய நீர் மூழ்கிகள் அதிநவீன வசதிகளைக் கொண்ட 15 வீட்டுத் தொகுதிகள் மற்றும் பல வசதிகளைக் கொண்ட முகாம்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பலதரப்பட்ட வாகனங்கள், பெறுமதிவாய்ந்த உபகரணங்கள் பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விசுவமடு, உடையார்கட்டு , புளியன்பொக்கணை, பள்ளிக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் பல மணி நேரம் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே மேற்படி முகாம்களையும் பெருந்தொகையான உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தின் 57, 58, 59 வது படைப் பிரிவுகளும், முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் செயலணிகளும் புலிகளின் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பிரிகேடியர், கடந்த 48 மணி நேரத்திற்குள் பள்ளிக்குடியிருப்பு மற்றும் உடையார்கட்டு பிரதேசங்களில் இடம் பெற்ற மோதல்களில் சுமார் ஐம்பது புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 150ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனரென்று படைத்தரப்பு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உடையார்கட்டுக் குளப் பிரதேசத்தை நோக்கி முன்னேறிய இராணுவத்தின் மூன்றாவது செயலணியினர், புலிகளுக்குச் சொந்தமான கவச தடுப்புகளுடன் தயாரிக்கப்பட்ட 35 அடி நீளமான நீர் மூழ்கி ஒன்று, நிர்மாணிக்கப்பட்ட நிலையில் உள்ள மேலும் மூன்று நீர்மூழ்கிகள், தற்கொலைத் தாக்குதல் படகுகள் மூன்று, பெருமளவிலான கடல் உபகரணங்கள், பலவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
இராணுவத்தின் மூன்றாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்தியப்பிரிய லியனகே தலைமையிலான படையினர் தொடர்ந்தும் முன்னேறி நடத்திய தேடுதல்களின் போது :-
நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய மேலும் பல உபகரணங்கள், ஒட்டு வேலைக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், டோரா போன்ற அதிவேக தாக்குதல் படகு ஒன்று, பெரும் எண்ணிக்கையான தண்ணீர் பம்புகள், இரண்டு லொறிகள், பஸ் வண்டி ஒன்று, ட்ரக் வண்டிகளையும், 50 – 100 கேவிஏ அதிசக்திவாய்ந்த ஜெனரேட்டர் – 1, மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பவுசர் – 01, லேட் மெஷின் – 02, அதிசக்தி வாய்ந்த கொம்பரசர்கள் – 02, மின்சாரத்தினால் இயங்கும் மோட்டார்கள், பல்வேறு வாகனங்களின் எஞ்சின்கள், 75 கீ 15 அடி பரப்புக்களைக் கொண்ட மிகவும் பாதுகாப்பாக விமானங்களை தரித்து வைக்கும் தரிப்பிடம், 20 கீ 30 அடி பரப்பைக் கெணாட அதிநவீனமானதும், குளிரூட்டப்பட்டதுமான 15 வீடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.
உடையார்கட்டுக் குள பிரதேசத்தில் சுமார் 2 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட இடத்தில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை விசுவமடு நகரைக் கைப்பற்றிய இராணுவத்தின் 58 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சலேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினர் அங்கிருந்து பல முனைகளில் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர்.
இதன் போது விசுவமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த முகாமிலிருந்து முல்லைத்தீவு காட்டுப் பகுதிக்குச் சென்று வரக் கூடியதாக இயற்கை வளங்களைக் கொண்டு இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மிகப் பெரிய கட்டிடம் ஒன்றையும், புலிகள் பயன்படுத்திய மிகப் பெரிய மாநாட்டு மண்டபம், அருள் ரக குண்டுகள், 1000 துப்பாக்கி ரவைகள் மற்றும் உபகரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியிலுள்ள பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மற்றுமொரு பாரிய முகாமை இராணுவத்தின் நான்காவது செயலணியினர் கைப்பற்றியுள்ளனர்.
15 பாரிய பங்கர்களைக் கொண்ட இந்த முகாமிலிருந்து 12 கீ 20 அடி பரப்பைக் கொண்ட கொள்கலன் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இந்த கொள்கலன் நிறைய யூரியா நிரப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரிகேடியர், ஜீப், பவுசர், கப் அரக வாகனம் மற்றும் ட்ரக் வண்டிகளையும் மீட்டெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, உடையார்கட்டுக் குளம் பகுதியில் உள்ள முகாம் ஒன்றிலிருந்து ஐந்து கட்டடங்களையும், 200 பெட்டி கிளேமோர் குண்டுகளையும், வரைபடங்கள் – 10, மற்றும் பெருந்தொகையான வெடி மருந்துகளையும் மீட்டெடுத்துள்ளனர்.
விசுவமடு பிரதேசத்திற்குள் படையினர் பிரவேசித்ததையடுத்து அங்கிருந்து பின்வாங்கிச் சென்ற புலிகள் விசுவமடுவுக்கு மத்திய பகுதியிலிருந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டிலுள்ள கோட்டைகளை நாளுக்கு நாள் இழந்து வந்த புலிகள் தற்பொழுது தமது கட்டுப்பாட்டில் உள்ள உபகரணங்களையும், ஆயுதங்களையும் இழந்து வருவதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply