மகசின் சிறையில் இருந்த கைதி வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணைக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதி ஒருவர் காயங்களுடன் காலி கரகாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தலையில் காது பக்கம் கட்டுக்கள் போடப்பட்டு, உடலின் ஒரு பக்க அவயவங்கள் இயங்காத நிலையில் அவர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அவரால் பேச முடியாதிருப்பதாகவும், குழாய் மூலமாக நீராகாரமே அவருக்கு வழங்கப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கொடிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சுந்தரம் சதீஸ்குமார் என்ற 28 வயது கைதியே இவ்வாறு காலி கரகாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

வழக்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றபோது, இவர் மயங்கி வீழ்ந்ததனால் தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் அவரது மனைவியிடம் கூறியிருப்பதாகவும், தனது கணவனை காலி கரகாப்பிட்டி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு அல்லது வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிப்பதற்கான முயற்சியில் அவரது மனைவி ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து மோசமாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட கைதிகளில் றாகம வைத்தியசாலையில் மரணடைந்த நிமலரூபன்இ அதே வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்து மரணமடைந்த டெல்றொக்சன் ஆகிய தமிழ் அரசியல் கைதிகளின் மரணமடைந்தார்கள்.

இந்தப் பின்னணியில் காலி கரகாப்பிட்டியில் மர்மமான முறையில் காயங்களுடன் சுந்தரம் சதீஸ்குமார் என்ற கைதி அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும், கைதிகளின் நலன்களில் அக்கறையுள்ளவர்களும், தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply