உறவுகளைத் தேடி வவுனியாவில் கண்ணீர்க் கதறல்
சர்வதேச காணாமற் போனோர் தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஒகஸ்ட் மாதம் 30ம் திகதி சர்வதேச காணாமற்போனோர் தினமா அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகின் பல நாடுகளிலும் பொலிஸாரினாலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறையும் கரிசனையும் செலுத்தி செயற்படுகின்றன.
இந்தவகையில் சர்வதேச காணாமற்போனோர் தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காணாமல் போனோர் தினத்தையொட்டி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று இந்து, பௌத்த, கிருஸ்தவ, முஸ்லிம் என மதரீதியிலான வழிபாடுகளில் ஈடுபட்டு வவுனியா பஸ் நிலையத்தை வந்தடைந்து ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.
இன்றைய ஆர்ப்பாடத்தில் யுத்தகாலத்தில் காணாமல் போன இலங்கைப் படையினரின் உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வவுனியா பஸ்நிலையப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்இ பெருமளவிலான பொலிஸார் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply