பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் 7 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 2 இடங்களில் நடைபெற்ற தனித்தனி சம்பவங்களில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் 7 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரின் ஹசார் கஞ்சி பகுதியில் நேற்று ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென காரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் காரில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் அந்த நபர்கள், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள் மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இந்த படுகொலைகளுக்கு ஹசாரா ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பிரவெரி சாலை மற்றும் மேற்கு புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டது. இதேபோல் பலுசிஸ்தான் ஷியா அமைப்பு சார்பில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதால், அங்கு கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஷியா சமூக தலைவர் சர்தார் சாதத் ஹசாரா வலியுறுத்தியுள்ளார். மேலும் குவெட்டா நகரில் நாளை முழு அடைப்பு நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் இரண்டு தினங்களுக்கு முன் ஷியா மதகுரு, அவரது கார் டிரைவர், பாதுகாவலர் ஆகியோர் குவெட்டா நகரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு லஷ்கர்-இ-ஜாங்வி தீவிரவாத அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply