மீள்குடியேற்றமின்றி பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதிப்பு

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது உள்ளுரில் இடம்பெயர்ந்திருந்த 3 லட்சம் பேரையும் மீள்குடியேற்றம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமது கிராமங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதனால், தங்களின் மீள்குடியேற்ற கனவுகள் சிதைந்துபோயிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மீள்குடியேற முடியாத கிராமங்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முள்ளிக்குளமும் ஒன்று. இங்கு முன்னர் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முள்ளிக்குளத்திற்கு அருகில் உள்ள மறிச்சுக்கட்டி என்ற இடத்திலும் 110 குடும்பங்கள் காயாக்குழி என்ற இடத்திலும் காட்டுப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமிழகத்தில் இன்னும் தஞ்சமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

‘வீடுகளையும் காணிகளையும் எட்டிப்பார்க்கின்ற தொலைவில் நாங்கள் இருக்கின்றோம். ஊருக்குள் செல்ல எங்களுக்கு அனுமதியில்லை.எமது தோட்டங்கள் வயல்களில் கடற்படையினர் பயிர் செய்கின்றார்கள். நாங்கள் தொழில்வாய்ப்பின்றி யானைகள் சரணாலயமாகிய காட்டுப் பகுதியில் குடியிருக்கின்றோம். ‘என்றார் மறிச்சுக்கட்டியில் உள்ள முள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஒருவர்.

காயாக்குழியில் இருப்பவர்களும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபையினால் பவுசர் மூலம் வழங்கப்படுகின்ற நீரையே அவர்கள் தமது குடிநீருக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

‘பவுசர் வராவிட்டால் அன்று குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. சமையலும் செய்ய முடியாது. கழிப்பறை வசதிகளும் இல்லை. குளிப்பதற்கென கிடங்கு ஒன்றில் இருந்து கிடைக்கின்ற தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. எல்லோருக்கும் இங்குள்ள தண்ணீர் போதாது. முந்துபவர்கள் மட்டும்தான் குளிக்க முடியும்’ என்று தமது நிலைமை குறித்து காயாக்குழியில் உள்ளவர் ஒருவர் கூறுகிறார்.

முள்ளிக்குளத்தில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று வருவதற்கு மாத்திரம் கடற்டையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

‘ஊருக்குள் எவரும் செல்ல முடியாது. நிரந்தரக் கட்டிடங்கள் அமைத்து அங்கு கடற்படையினர் தங்கியிருக்கின்றார்கள்’ என்றார் ஊர்ப் பெண்மணி ஒருவர்.

முள்ளிக்குளம் பகுதி மக்களை வேறிடத்தில் குடியமர்த்துவதற்கென 120 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே முள்ளிக்குளம் பகுதி மக்களின் விருப்பமாக இருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply