இலங்கைத் தமிழர் செந்தூரன் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை, சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக, செந்தூரன் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக, பல்வேறு முகாமைச் சேர்ந்த அகதிகள் தமிழக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக சிறையில் உண்ணாவிரதமிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர் மீது தற்போது புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை கண்டியைச் சேர்ந்தவர் செந்தூரன் (31). புலிகள் இயக்க ஆதரவாளரான இவருக்கு, முருகன் உட்பட பல்வேறு பெயர்கள் உள்ளதாக தெரிகிறது.

இவர் தமிழகத்தில் உள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு, படகில் அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறியவர்களுக்கு, 30,000 ரூபாயும், பெரியவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாயும் வசூலித்து வந்தார்.

இதை நம்பி, அவரிடம் பணம் செலுத்திய இலங்கை அகதிகள் 70 பேரை கடந்த ஜனவரி 13ம் திகதி, கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து கொச்சி வழியாக, அவுஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்பத் திட்டமிட்டிருந்தனர்.

அகதிகள், 70 பேரையும் எர்ணாகுளம் லாட்ஜ் ஒன்றில், செந்தூரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்க வைத்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்திருந்தனர்.

இத்தகவல், எர்ணாகுளம் சென்ட்ரல் பொலிசாருக்கு கிடைத்தது. செந்தூரன் மற்றும் சிலரை கைது செய்து, உள்ளூர் சிறையில் அடைத்தனர். பின், மார்ச், 20ம் திகதி ஜாமினில் வெளியே வந்த செந்தூரன், பூந்தமல்லி அகதிகள் முகாமில், மார்ச், 23ம் திகதி தங்கினார்.

சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த இலங்கை அகதி மங்கையர்கரசி,23. இவர், சென்னை சங்கர் நகர் பொலிசில், “அவுஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்புவதாகக் கூறி, செந்தூரன் பணம் வாங்கி ஏமாற்றி விட்டார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டால், கொலை மிரட்டலுடன் ஆபாசமாக பேசுகிறார்´ என முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து, செந்தூரன் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சங்கர் நகர் பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது எடுக்கப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கையை கண்டித்து, உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அவர் மீது, தற்கொலைக்கு முயற்சித்ததாக பூந்தமல்லி பொலிசார் வழக்கு பதிவு செய்து, கடந்த, 31ம் திகதி சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட செந்தூரன், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பலரிடம், அவுஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்பி வைப்பதாகக் கூறி, லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த தகவல் வெளியானது.

அவரிடம் ஏமாந்த, ராமேஸ்வரம், தேவக்கோட்டை உட்பட தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், செந்தூரன் மீது பொலிசில் புகார் கொடுக்க தயாராகி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply