கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் போராட்டக்காரர்கள் 5 ஆயிரம் பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அணு உலையை முற்றுகையிட முயன்ற அவர்களை கடற்கரையிலேயே பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடரும் இந்தப் போராட்டத்தால் கூடங்குளத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இடிந்தகரையில் மதிய உணவு சமைக்கப்பட்டு, ஆட்டோ மூலம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்ததைக் கண்டித்தும், அணுஉலைகளை நிரந்தரமாக மூடக் கோரியும் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.
இதையடுத்து கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இடிந்தகரைக்கு கடலோர கிராம மக்கள் வருவதைத் தடுக்கும் வகையில் அனைத்து வழிகளையும் போலீஸôர் சீல்வைத்தனர்.
மேலும், இடிந்தகரை நோக்கி வந்தவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால், மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் படகுகள் மூலம் கடல் மார்க்கமாக இடிந்தகரைக்கு வந்து சேர்ந்தனர். அறிவித்தபடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 5000-க்கும் அதிகமானோர் இடிந்தரையில் உள்ள போராட்டப் பந்தலில் குவிந்தனர். அவர்கள் மத்தியில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் பேசினார்.
தொடர்ந்து காலை 11 மணியளவில் முற்றுகைப் போராட்டத்துக்காக பொதுமக்கள் இடிந்தகரையிலிருந்து புறப்பட்டு வேறுபாதை வழியாக சென்றனர். பொதுமக்கள் இடிந்தகரையைவிட்டு வெளியே சாலை வழியாக வருவதற்குப் பதிலாக கடற்கரை வழியாக அணுமின் நிலையத்தை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.
பொதுமக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 500 மீட்டர் அருகமையில் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் பொலிஸாரும் அங்கு வந்து சேர்ந்ததால் பொதுமக்கள் மேற்கொண்டு முன்னேறாமல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டனர். சுமார் 1,500 போலீஸôர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. செல்வராஜ், தென்மண்டல ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். அந்தப் பகுதியிலேயே கடற்கரையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply