போர்க்களமாக மாறிய கூடங்குளம் அணுமின் நிலைய வளாகம்
கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தக்கோரி இன்று 2 வது நாளாக நடந்த முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து பொலிசார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தினரை கலைத்தனர் . வன்முறைக்கும்பல் பொலிசாரை நோக்கி மணல் அள்ளி வீசினர். பலரை கைது செய்து பொலிசார் அழைத்து செல்கின்றனர். இன்று நடந்த வன்முறையில் பொலிசார் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இங்கு நடந்த வன்முறையை தொடர்ந்து அருகில் உள்ள பல கிராமங்களுக்கு வன்முறை பரவுகிறது. பல இடங்களில் தீ வைப்பும், சாலைகளில் தடுப்புகளும் போடப்பட்டுள்ளன.
இங்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சென்னையில் டி.ஜி.பி,.யுடன் முதல்வர் ஜெ., விவாதித்து வருகிறார். தலைமை செயலகத்தில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் டி.ஜி.பி., ராமானுஜம், உள்துறை செயலர் ராஜகோபால், தலைமை செயலர் தேவந்திரநாத்சாரங்கி மற்றும் அமைச்சர்கள்- உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையில் மணப்பாட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் பலியானார். இதனிடையே, கூடங்குளம் பிரச்னையில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அணுமின் நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ள போராட்டக்குழுவினர் நேற்று பேரணியாக புறப்பட்டனர். அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணி பாதை திடீரென மாற்றப்பட்டது. இதனையடுத்து பொலிசார் தங்களின் பாதுகாப்பு பணியை மாற்றுவதில் சிரமப்பட்டனர்.
போராட்டம் துவங்கும் முன்னதாக இடிந்தகரையில் சர்ச் முன்பாக நடந்த கூட்டத்தில் உதயக்குமார் பேசுகையில்: இந்த போராட்டத்தில் எதுவும் ஏற்பட்டால் நான் பொறுப்பேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவிக்கிறார், நான் பொறுப்பேற்கிறேன். முதலில் போராட்டத்தை தலைமை ஏற்கும் நபர்கள் செல்வார்கள். இதனை தொடர்ந்து சின்ன குழந்தைகள் வெள்ளைக்கொடி ஏந்தி செல்வார்கள், அடுத்து பெண்கள் , ஆண்கள் என வரிசையாக செல்ல வேண்டும். வைராவிகிணறு என்ற இடத்தில் அமைதியாக அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆனால் பாதையை திடீரென மாற்றி கடற்கரை வழியாக அணுமின் நிலையத்தின் பின்புறமாக சென்று நெருங்கினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply