மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் 21 பேர் சரண்
மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில், தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 21 பேர் தம்மிடம் சரணடைந்திருப்பதாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்த வழக்கு திங்களன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பொலிசார் இந்த சந்தேக நபர்களை நீதவான் முன்னிலையில் நிறுத்தியிருந்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 19 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் 40 பேரையும் வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மேலதிக நீதவான் ஆர்.திசாநாயக்க பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஊடாக நீதித்துறையின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி, மன்னார் சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.
நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களைத் தாங்கள் கண்ணால் கண்டு அடையாளம் காட்டி விபரங்கள் தெரிவித்திருந்த போதிலும், அவர்களில் முக்கியமானவர்களைப் பொலிசார் கைதுசெய்யத் தவறியிருந்ததாக மன்னார் சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
குறிப்பிட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், பொலிசாருக்கு எதிராகத் தமது போராட்டம் ஆரம்பமாகும் என எச்சரிக்கை விடுத்த சட்டத்தரணிகள், கடந்த திங்கட்கிழமை தமது பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு கடமைக்குத் திரும்பியிருந்தார்கள்.
இந்தப் பின்னணியிலேயே சந்தேக நபர்கள் 21 பேர் பொலிசாரிடம் சரணடைந்த சம்பவம் நடந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply