எந்தக் கட்சிக்கு ஆதரவு? விசேட கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்வு

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.30 மணி முதல் தற்போது வரை கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளர் நாயகமும் கல்முனை பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு  ஆதரவான ஐந்து உலமாக்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சபையில் எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தரொருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், “கட்சிக்கு வாக்களித்த கிழக்கு மாகாண மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி பின்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி தீர்மானம் மேற்கொள்ளும்” என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மற்றுமொறு முக்கியஸ்தர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேச்சு நடத்தியுள்ளார். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித இறுதி தீர்மானமும் எட்டப்படவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

“எவ்வாறாயினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் செயற்பாடாது” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply