டக்ளஸை நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழக அரசு பதில் மனு
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றில் சரணடைந்து, பிடிவிறாந்தை திரும்பப் பெற வேண்டும் என, சென்னை செஷன்ஸ் நீதிமன்றில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
சென்னை, சூளைமேட்டில், 1986ம் ஆண்டு நடந்த சம்பவத்தில், இலங்கைப் போராளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், திருநாவுக்கரசு என்பவர் பலியானார்.
டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள் மீது, அமைந்தகரை பொலிஸார், வழக்குப் பதிவு செய்தனர். டக்ளஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பின், பிணையில் வெளியே வந்தனர். அதையடுத்து, இலங்கை சென்ற டக்ளஸ், அந்நாட்டு அமைச்சர் ஆனார்.
இவ்வழக்கு, சென்னை, நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றில், நிலுவையில் உள்ளது. நீதிமன்றில் ஆஜராகாததால், டக்ளஸுக்கு, பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேடப்படும் நபராக, அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பிடிவாரன்ட்டை வாபஸ் பெறவும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்கவும் கோரி, சென்னை செஷன்ஸ் நீதிமன்றில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, நீதிபதி ராஜகோபாலன் முன், நேற்று (12) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரபாவதி தாக்கல் செய்த பதில் மனு:
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, டக்ளஸ் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றில் தள்ளுபடி செய்தது. இவர் தாக்கல் செய்த முன் பிணை மனுவும், வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, இம்மனுவைத் தாக்கல் செய்தவரின் அடையாளம், உறுதியாக இல்லை.
வழக்கில் முதலாவதாக குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தன், 1986ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நான் தான் ஆனந்தன் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். எனவே, நீதிமன்றில் மனுதாரர் ஆஜராகி, தனது அடையாளத்தை காட்ட வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததற்கு, சரியான காரணங்களை, மனுதாரர் கூறவில்லை. தனது பெயரை மனுதாரர் மாற்றியிருந்தால், அதை நிரூபிக்க, எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.
குற்றவியல் வழக்கில் ஆஜராகவில்லை என்றால், பிடிவிறாந்து பிறப்பிக்கப்படும் விஷயம், எம்.பி.,யாக இருக்கும் ஒருவருக்கு தெரிந்திருக்கும். ஆனால், 12 ஆண்டுகளுக்கும் மேல், நீதிமன்றில் ஆஜராகவில்லை. 1994ம் ஆண்டு, எம்.பி.,யாக மனுதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ம் ஆண்டு முதல், தலைமறைவாக உள்ளார்.
கால தாமதத்துக்கு காரணம் நீதிமன்றில் தெரிவிக்கவில்லை. நீதிமன்றில் சரணடைந்து, பிடிவிறாந்தை திரும்பப் பெற வேண்டும்; ஆனால், நீதிமன்றில் ஆஜராகும் எண்ணம், மனுதாரருக்கு ஒருபோதும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணையை, வரும், 20ம் திகதிக்கு, நீதிபதி ராஜகோபாலன் தள்ளிவைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply