முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு சந்திப்பு ரத்து! மீண்டும் இன்று சாத்தியம் ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் நேற்று (14) இரவு நடைபெறவிருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு வருவதாக வாக்குறுதி அளித்த முஸ்லிம் காங்கிரஸ் வாக்குறுதியை மீறி பேச்சுவார்த்தைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இரத்தாகியுள்ளது.
கொழும்பு பம்பலபிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெறுவதாக இருந்தது.
இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இரவு 8 மணி கடந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு வருகை தராததால் கூட்டமைப்பினர் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினர். ஆனால் தொலைபேசிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலியின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியபோது அது செயற்பாட்டில் இருந்தது.
கூட்டமைப்பினரின் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளித்த ஹசன் அலி, தலைவர் ஹக்கீம் அலரி மாளிகை சென்றுள்ளதால் இன்னும் வரவில்லை எனவும் அதனால் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது எனவும் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்புகளுடன் கூடியிருந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதன் பின்னர் ஏமாற்றத்துடன் அலுவலகத்தில் இருந்து வீடு சென்றுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் சமூகமளிக்க முடியாது போயிருந்ததால் கூட்டமைப்பின் தலைமைக்கு அது குறித்து அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறு செய்யாமல் மௌனமாக இருந்தமைக்கு அர்த்தம் என்ன என்று அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுத்துள்ளது.
கூட்டமைப்பை பயன்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பேரம் பேசுகிறதா? கூட்டமைப்பின் மூத்த தலைவரை முஸ்லிம் காங்கிரஸ் அவமதித்ததா? நாங்கள் அரசுடன்தான் இணைவோம் என்று கூட்டமைப்புக்கு பேச்சுவார்த்தை புறக்கணிப்பின் மூலம் தகவல் வழங்கியதா? தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தை அவமதிக்கிறதா? போன்ற பல்வேறு கேள்விகள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுத்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கூறிய கேள்விகளுக்கு பதிலளிக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply