அரைமணி நேரத்தில் தமிழீழத்தை பெறத் துடிக்கும் சீமான்

ஐக்கிய நாடுகள் சபையில் அரை மணி நேரம் பேசவிட்டால் தம்மால் தனி நாடு அடைந்துவிட முடியும் என்று நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் வார இதழுக்கு சீமான் அளித்திருக்கும் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளாவது,

கேள்வி: ´சரி… நீங்கள் பிரதமராகவோ, தமிழ்நாட்டின் முதல்வராகவோ இருந்தால், இலங்கையுடனான உறவை எப்படி அணுகுவீர்கள்?´´

பதில்: ´´பிரதமராவது என் கனவல்ல. ஒரே கனவு… 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக் கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.´´

கேள்வி: ´´அடிப்படையில் உங்கள் இயக்கத்தின் இலக்குதான் என்ன?´´

பதில்: ´´இலக்கு ஒன்றுதான். இனத்தின் விடுதலை!´´

கேள்வி: ´´ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு காணும் உங்கள் கனவு, இந்தியத் தமிழர்களுக்கும் நீளுமா?´´

பதில் : ´´இல்லை. ஆனால், இந்தியாவை ஆளும் தேசியக் கட்சிகள் இந்த நிலத்தில் இருந்து நாங்கள் பிரிந்து போவதற்கான காரணங்களை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்று மட்டும் சொல்வேன். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசத்தின் மீது எப்படி வரும் எனக்கு நேசம்?´´

கேள்வி: ´´தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?´´

பதில்: ´´அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்! என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply