இலங்கை அகதிகள் குறித்து ஆஸி. எதிர்க் கட்சி கேள்வி
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர வந்தவர்களில் 18 பேர் நவுரு தீவில் உள்ள அகதிகள் முகாமுக்கு செல்ல விருப்பம் இல்லாமல் கொழும்பிற்கே திரும்பிச் செல்ல முடிவெடுத்திருப்பது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை பற்றி இதற்குமுன் தஞ்சம் கோரி வந்தவர்கள் தெரிவித்திருந்த கூற்றுகளை கேள்விக்குள்ளாக்குவதாக ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தீவைச் சென்றடைந்திருந்த இலங்கையர்களில் 18 பேரை அவர்களது தஞ்சம் கோரும் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்காக பசிஃபிக் தீவான நவுருவுக்கு கொண்டுசெல்ல அதிகாரிகள் முற்பட்டபோது, தாங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச்செல்ல விரும்புவதாக அவர்கள் கூறினர்.
‘நவுரு சென்றால் தண்டனையிலிருந்தும் உயிராபத்திலிருந்தும் தமக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என்பதை அறிந்தும் அவர்கள் இலங்கை செல்ல உடன்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பத்தான் செய்கிறது.’
இதனை அடுத்து சனிக்கிழமை அவர்கள் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.
அவுஸ்திரேலிய அரசு இந்த மாதத்தில் முன்னதாக நவுருவில் தஞ்சம் கோரிகளுக்கான மையத்தை ஆரம்பித்ததன் பின்னர், சொந்த நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள முதல் அகதிகள் குழு இவர்கள்தான்.
கடந்த ஓராண்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தஞ்சம் கோர வந்த ஆட்களை ஏற்றிவந்த சுமார் 140 படகுகளை வழிமறித்திருந்தனர்.
அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்ட வெளியுறவு விவகாரங்கள் தொடர்பில் பேசவல்ல அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் திருமதி ஜூலி பிஷப், கடந்த மூன்று வருடங்களாக ஆஸ்திரேலிய அரசு தஞ்சம் கோரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்து வந்த முறை பற்றி கேள்விகளை எழுப்புவதாகக் கூறினார்.
‘உயிராபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிப்பதற்காக தஞ்சம் கோரி விண்ணப்பித்த இந்த இலங்கையர்கள், சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நவுரு சென்றால் தண்டனையிலிருந்தும் உயிராபத்திலிருந்தும் தமக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என்பதை அறிந்தும் அவர்கள் இலங்கை செல்ல உடன்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பத்தான் செய்கிறது.’ என்றார் ஜூலி பிஷப்
‘சட்டவிரோத ஏஜெண்டுகளின் தவறான வழிகாட்டுதல்களை நம்பி படகில் கிளம்பிவந்துவிட்ட ஆட்கள், தங்களுக்கு எது நல்லது என்பதை சீர்தூக்கி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.’
தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நிரந்தர குடியேற்ற அனுமதி வழங்காமல், சொந்த நாட்டில் ஆபத்து நீங்கும் காலம் வரைக்கும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதை அனுமதிக்கும் விதமான தற்காலிக விசாக்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஜூலி குறிப்பிட்டார்.
ஆபத்து வராது என்று தெரியவரும் சமயத்தில் ஆஸ்திரேலியா வரும் படகுகளை திருப்பி அனுப்பும் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கிறிஸ் போவன்
இந்த இலங்கையர்கள் நவுரு செல்லாமல் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்தது பற்றி முன்னதாக கருத்து வெளியிட்டிருந்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன், சட்டவிரோதக் குடியேற்றத்தில் ஈடுபடும் குற்றக்கும்பல்களை ஒடுக்குவதில் இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கூறியிருந்தார்.
சட்டவிரோத ஏஜெண்டுகளின் தவறான வழிகாட்டுதல்களை நம்பி படகில் கிளம்பிவந்துவிட்ட ஆட்கள், தங்களுக்கு எது நல்லது என்பதை சீர்தூக்கி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதன் அறிகுறி இந்த சம்பவம் என்று அமைச்சர் போவன் தெரிவித்தார்.
இதனிடையே தாயகம் திரும்ப சம்மதித்திருந்த தஞ்சம் கோரிகள் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையம் வந்திறங்கியவர்களை இலங்கை அதிகாரிகளும் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் விசாரித்து தகவல்களைப் பதிந்துகொண்டதாகவும், திரும்பி வந்துள்ள 18 பேரில் 14 பேர் சிங்களவர்கள், 3 பேர் தமிழர்கள், ஒருவர் முஸ்லிம் என்றும் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply