ஆஸி. குடியேற்றவாசிகளுக்கு தற்காலிக தங்குமிட அனுமதி வழங்கப்பட வேண்டும்!

புகலிடம் கோரி வருபவர்களுக்கு நிரந்தரக் குடியேற்ற அனுமதி வழங்காமல் சொந்த நாட்டில் ஆபத்து நீங்கும் வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதை அனுமதிக்கும் தற்காலிக அனுமதியை அரசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிறிஸ்மஸ் தீவை சென்ற டைந்த இலங்கையின் 18 புகலிடக் கோரிக்கையாளர்களை மேலதிக பரிசீலனைக்காக பசுபிக் தீவான நௌறுவுக்கு கொண்டு செல்ல அவுஸ்திரேலிய அதிகாரிகள் முற்பட்டபோது தாம் இலங்கை திரும்புவதற்கு விரும்புவதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் கிறிஸ்மஸ் தீவில் இருந்து அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

இதனிடையே அவுஸ்திரேலியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஜூலிபிஷப், கடந்த மூன்று வருடங்களாக அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்த நடைமுறை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நௌறு தீவுக்குச் சென்றால் தண்டனையில் இருந்தும் உயிராபத்தில் இருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும் என்பதை அறிந்தும் அவர்கள் இலங்கை திரும்ப இணக்கம் தெரிவித்தமை பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஆபத்து ஏற்படாது என உறுதி செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகுகளைத் திருப்பி அனுப்பும் கொள்கையையும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தமை சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபடும் குற்றக் கும்பல்களை ஒடுக்குவதில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply