இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை! ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் கருத்தை ஏற்க முடியாது

இந்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக இந்நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர்கள் மீண்டும் தமது தாய்நாடு திரும்பும் சூழல் இந்நாட்டில் ஏற்படுத்தப்படவேண்டும். இலங்கை திரும்புவது தொடர்பில் இந்தியாவில் உள்ள இலங்கையர்களது விருப்பங்கள் அறியப்படவேண்டும்.

இந்த நடவடிக்கைக்கள் முதலில் செய்யப்பட வேண்டும். இவைகளை செய்யாமல், இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த அனைத்து இலங்கை தமிழர்களுக்கும், இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல.

இந்த கருத்து நல்ல நோக்கத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அது இன்று இலங்கையில் தமிழர்களின் ஒட்டுமொத்த ஜனத்தொகையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உள்நாட்டில் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்பது எமது நிலைபாடாகும். அதேபோல், இந்தியாவுக்கு மட்டும் அல்ல, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்பவேண்டும் எனபதும் எமது நிலைப்பாடாகும்.

ஆனால் அதற்கான முழுமையான சூழல் இன்று உள்நாட்டில் நிலவவில்லை. இந்த சூழலை ஏற்படுத்துவது, இலங்கை அரசாங்கத்தினதும், தமிழ் அரசியல் தலைமைகளினதும், இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தினதும் கடைமையாகும்.

இதை செய்வதற்கான உரிய அழுத்தங்கள் உரிய தரப்பினருக்கு தரப்பட வேண்டும். அத்துடன் இலங்கை குடியுரிமையை இழந்துவிட்டு இந்திய பிரஜாவுரிமை பெற்றுக்கொள்ள அங்கு வாழும் இலங்கை தமிழர்கள் அனைவரும் விரும்புகிறார்களா என்பது தொடர்பில் முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கே முதலுரிமை கொடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இலங்கை வாழ் மலையக தமிழர்களின் ஒப்புதல் இன்றி இந்திய அரசு இலங்கை அரசுடன் செய்துகொண்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக, இலங்கை வாழ் தமிழர்களின், குறிப்பாக மலையக தமிழர்களின் அரசியல் பலம் இந்நாட்டில் சிதைக்கப்பட்டது.

இன்றைய பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 35 மலையக தமிழ் எம்பீக்கள் இருக்க வேண்டிய நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது. இன்று பெருந்தொகையான வட-கிழக்கு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி மேற்குலகில் வாழ்கின்றனர். அதேபோல் சமீப காலமாக பெருந்தொகையான தமிழர்கள் தினசரி ஆஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக கடற்பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களில் கணிசமானோர் ஆஸ்திரேலியா சென்று சேர்வதில்லை.

அவர்களது வாழ்வு ஆழ்கடலில் முடிகிறது. வெளிநாட்டுக்கு இடம்பெயருவதற்கு பின்னால் இருக்கின்ற காரணங்கள் எத்தகையனவாக இருந்தாலும், இதன்மூலம் இந்த நாட்டில் தமிழர்களின் ஜனத்தொகை படிப்படியாக குறைந்து வருகிறது என்பது உண்மை. தமிழ் வாக்காளர்கள் குறைவதால் தெரிவு செய்யப்படும் தமிழ் பிரதிநிதிகளின் தொகை குறைகிறது என்பதும் உண்மை. அதன்மூலம் தமிழர்களது அரசியல் பலம் குறைகிறது என்பதும் அப்பட்டமான உண்மை. இந்த நிலைமை தமிழ் எதிர்ப்பு இனவாதிகளை மகிழ்ச்சிபடுத்துகிறது என்பதும் உண்மை.

எனவே இன்று எழுந்துள்ள, இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு குடியுரிமைகள் வழங்கப்படுவது தொடர்பில் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டும். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மண்ணுரிமை பற்றி நாம் குரல் எழுப்புகின்றோம்.

அதேவேளையில், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், திரும்பி வாராதவிடத்து அவர்கள் வாழ்ந்த கிராமங்களும் பறிபோகின்றன. அத்துடன் இலங்கையில் தமிழர்கள் மிக சிறிய சிறுபான்மையாக மாறும் ஒரு எதிர்காலம் விரைவில் ஏற்படலாம். எனவே, இது தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply