இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதற்கு இந்தியா முயற்சி

இலங்கையில் போருக்குப் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க இந்தியா தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக இலங்கை அரசு குற்றஞ் சுமத்தியுள்ளது.  இந்திய ஊடகங்களே இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு சார்பில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய இனப்பிரச் சினைக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதியின் முயற்சியை கடந்த கால முயற்சிகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது.

1980களில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவே பயிற்சி அளித்தது. அதுவே இன முரண்பாடுகள் தீவிரமடைய வழிவகுத்தது. 2009ம் ஆண்டு வன்னியில் புலிகளுக்கு எதிரான போர் முன்நகர்வுகளை தடுத்து நிறுத்த இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தீவிர முயற்சி செய்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை வெற்றிபெற்றது.

இன்று பிரபாகரனோ, பொட்டு அம்மானோ அல்லது சூசையோ உயிருடன் இருந்திருந்தால் சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கவனத்தில் எடுத்திருக்காது. வடக்கில் எப்போது தேர்தல் நடத்த வேண்டும் என்பது பற்றி இந்திய ஊடகங்கள் இலங்கைக்கு போதிப்பது அதிகபிரசங்கித்தனமான செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இந்து பத்திரிகை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply