இங்கிலாந்தை வென்றால் டீசல், இந்தியாவை வென்றால் பெட்ரோலா? உலக கிண்ணத்தை வென்றால் மண்ணெண்ணையா ?

இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்தை வென்ற சந்தோசத்தில் நாட்டு மக்கள் திளைத்திருந்த ஆரவாரத்தை பயன்படுத்துக்கொண்டு இந்த அரசாங்கம், இரவோடு இரவாக டீசல் விலையை உயர்த்தி விட்டது. இனி, அடுத்து நாம் இந்தியாவை வென்றால், பெட்ரோல் விலையையும், உலக கிண்ணத்தை வென்றால், மண்ணெண்ணெய், பால்மா, காஸ், சீனி விலைகளையும் இந்த அரசாங்கம் உயர்த்தலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். டீசல் விலையுயர்வு தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,  

கிரிக்கட் போட்டியில் பெற்ற வெற்றி ஆரவாரத்தில் மக்கள் மூழ்கி இருக்கும் போது இந்த அரசாங்கம் சந்தடி சாக்கில் இந்த விலையுயர்வுகளை செய்கிறது. இது தேரோட்டங்களின் போது சங்கிலி அறுப்பதை போன்ற திருட்டு செயலாகும். கொழும்பில் ஆடிவேல், யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆலயங்களின் தேரோட்டங்களின் போது பக்தி பரவசத்தில் மக்கள் அரோகரா கோஷம் போடுவார்கள். அவ்வேளைகளில், திருடர்கள் பக்தைகளின் கழுத்தில் தொங்கும் தங்க சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓடுவார்கள்.

அதைப்போல், இந்த அரசாங்கம் செயல்படுகிறது. திருட்டு சங்கிலியுடன் ஓடுகின்ற திருடனும், அரோகரா என கத்திக்கொண்டு ஓடுவதைபோல், இந்த அரசாங்கத்து அமைச்சர்களும், விலைகளை உயர்த்திவிட்டு விளையாட்டு வெற்றிகளை பற்றி உரக்க பேசுகிறார்கள். விளையாட்டு போட்டிகளுக்கு நேரடியாக சென்று தொலைகாட்சிகளில் காட்சி தருகிறார்கள்.

கிரிக்கட் போட்டியில் நமது நாட்டு வீரர்கள் தமது திறமையால் பெறுகின்ற வெற்றிகளை, இந்த அரசாங்கம் தனது பொருளாதார தவறுகளை மறைப்பதற்கு பயன்படுத்துகிறது. இதனால், இன்று நமது அணியினர் விளையாட்டில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என விரும்பும் நாட்டுபற்றாளர்களுக்கும் மனதில் பயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய பரிதாப நிலைமை நமக்கு ஏற்பட்டுள்ளது.

கிராமத்து கூட்டுறவு கடைகளை பாராமரிக்கும் அதிகாரிகளுக்கும் தகைமை தேவைப்படுகிறது. ஆனால், இந்த நாட்டின் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றில் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, தவறுகளை செய்வதற்கும், தவறுகளை மூடி மறைப்பதற்கும் மாத்திரமே தகைமை இருக்கிறது.

நாட்டு வளங்களை சுரண்டும் உள்நாட்டு பொருளாதார ஆக்கிரமிப்பாளர்களுக்கு தங்கள் கொள்ளை, ஊழல்களை தங்கு தடையின்றி செய்வதற்கு நிதி அமைச்சகம் உரிய தளங்களை ஏற்படுத்தி தருகிறது. இந்த கடமையை இவர்கள் திறமையாக செய்கிறார்கள்.

ஆனால், நாட்டின் சாதாரண மக்கள் மீது மென்மேலும் வாழ்க்கை சுமையை கூட்டாமல் மானிய விலைகளில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற அக்கறை இவர்களுக்கு கிடையாது. உலக சந்தையை காரணம் காட்டி விலை உயர்த்த ஒரு அரசாங்கம் தேவையா? டீசல் விலை அதிகரிப்பினால், ஏனைய பொருட்களின் விலைகளும் இனி சங்கிலி தொடராக அதிகரிக்கும் என்ற சாதாரண மக்களுக்கும் விளங்கும் பொருளாதார விதி இவர்களுக்கு விளங்கவில்லையா?

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply