புலிகளின் தற்கொலை பயிற்சி முகாம் முல்லை காட்டுப் பகுதியில் கண்டுபிடிப்பு

புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய பாரிய பயிற்சி முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு அடர்ந்த காட்டுப் பகுதியில் புலிகளால் மிகவும் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாரிய முகாமை இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் இந்த முகாமை பயன்படுத்தியிருக்கலாம் என்று படையினர் நம்புவதாக தெரிவித்த பிரிகேடியர், நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்த உடற் பயிற்சி நிலையம், விரிவுரை மண்டபம், நிலக்கீழ் முகாம் மற்றும் பெருமளவிலான உணவு களஞ்சியத் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படையினரின் கடுமையான தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் பின்வாங்கிச் சென்ற புலிகள் விட்டுச்சென்ற ஜீப் ரக வண்டியொன்றையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஜீப்பை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனோ அல்லது அவருக்கு நெருக்கமான முக்கிய உறுப்பினர் ஒருவரோ கள நிலைமைகளை ஆராய்வதற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்றும் படைத்தரப்பினர் சந்தேகிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து சென்றிருக்கலாமென படையினர் நம்புவதாக தெரிவித்த அவர், புலிகளை தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுடன் பிரபாகரன் இறுதி இராப் போசனங்களை இங்கிருந்தே எடுத்துள்ளமைக்கான அறிகுறிகளும், அடையாளங்களும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இங்குள்ள பல்வேறு அறைகளில் ஒரு அறையில் தற்கொலை தாக்குதலை நடத்தி உயிரிழந்த புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவு உறுப்பினர்களின் படங்களும் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வன்னி இறுதிக் கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் சாலை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் மோதல்களுக்குப் பின்னர் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஐந்து சடலங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

ரி – 56 ரக துப்பாக்கிகள் – 10, தற்கொலை அங்கிகள், தொலைத் தொடர்பு கருவிகள் – 04, மோட்டார் சைக்கிள் – 01, 40 மி. மீ. ரக குண்டுகள், மிதிவெடிகள் – 40, பிஸ்டல்கள் 120 மி. மீ. ரக மோட்டார் குண்டு – 02, 12.7 மி. மீ. ரக விமான எதிர்ப்பு பீரங்கி – 93, பெருந்தொகையாக வெடிக்க வைக்கும் கருவிகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply