வன்னியிலிருந்து நோயாளிகளைக் கொண்டுவரும் முகமாக ஆறு மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

வடக்கே நடைபெறும் மோதல்களில் காயமடைந்துள்ளவர்களையும், நோயாளிகளையும் மேல் சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவர வழிசெய்யும் வகையில் நாளை சுமார் ஆறு மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து  தகவல் வெளியிட்ட, இலங்கை அரசின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் டாக்டர் அஜித் மெண்டிஸ், இந்த போர் நிறுத்தமானது ஆறு மணி நேரத்துக்கு இருக்கும் என்று சுகாதார சேவைகள் துறையின் செயலர் தம்மிடம் தெரிவித்ததாக எம்மிடம் கூறினார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வன்னிப் பகுதியிலுள்ள நோயாளிகளும் காயமடைந்தவர்களும் வவுனியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் டாக்டர் அஜித் மெண்டிஸ் தெரிவித்தார்.

இவ்வாறு வன்னியிலிருந்து சிகிச்சைக்காக வவுனியாவுக்கு கொண்டுவரப் படும் நோயாளிகளை கவனிப்பதற்கென்று, வவுனியா மருத்துவமனையில் தனிப் பிரிவு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அங்கு அறுவை சிகிச்சை வல்லுநர்கள், சிறப்பு மருத்துவர்கள், இரத்தம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த முடிவை பாதுகாப்பு அமைச்சகத்துடன் சேர்ந்து சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது என்றும், இந்தத் தகவல் இராணுவத்துக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் அஜித் மெண்டிஸ்  தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply