கேப்பாபிலவு மக்களுக்கு சூரியபுரம் அரச காணி பகிர்ந்தளிப்பு
கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியிலேயே நிரந்தரமாகத் தங்க வைக்கப்படுவர் எனவும் சூரியபுரம் காட்டுப் பகுதி அரச காணி என்பதால், அதனை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்த முகாமிலிருந்த மக்கள் படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வந்தனர். இறுதியாக கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி மனிக்பாம் முகாம் மூடப்பட்டதால் அங்கு எஞ்சியிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக ஏற்றிச்செல்லப்பட்டனர்.
இதற்கு முன்னர் செப்ரெம்பர் மாதம் 22 ஆம் திகதி மனிக்பாம் நலன்புரி நிலையத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் அந்த மக்களிடம் தற்போது இங்கிருந்து வெளியேறவேண்டும் எனவும் உங்களது சொந்த இடங்களில் இரண்டு மாதங்களுக்குள் குடியமர்த்தப்படுவீர்கள் எனவும் உறுதியளித்திருந்தனர்.
இதனை அடுத்து முகாமில் இருந்து ஏற்றிவரப்பட்ட கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்கள் தற்போது நந்திக்கடலுக்கு அண்மித்த சூரியபுரம் காட்டுப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மனிக்பாம் முகாமில் வைத்துக் கூறியது போல அந்த மக்களைச் சொந்த இடங்களில் 2 மாதங்களுக்குள் மீள் குடியமர்த்தப்படுவீர்களா? என முல்லைத்தீவு அரச அதிபரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்திலேயே நிரந்தரமாக குடியமர்த்தப்படவுள்ளனர். அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதியில் நிரந்தரமாக தங்குவதற்குரிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் குறித்த பகுதி அரச காணி என்பதால் அந்த மக்களுக்கு அதனைப் பங்கிட்டு வழங்கவுள்ளது என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply