வன்னியில் மக்கள் மழை, வௌ்ளத்தால் அவதி
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வன்னியில் மீள்குடியேற்றங்களும் கடந்த மூன்றாண்டுகளாகவும் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகள் பெய்த மழையை சுமந்த வன்னியின் மீள்குடியேற்றக் கூடாரங்கள் தற்பொழுது பெய்யத் தொடங்கியிருக்கும் பருவமழைக்கு தள்ளாடத் தொடங்கியிருக்கின்றன.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வறட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வறட்சியால் எரிந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மக்களுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது.
குடிநீருக்கு அல்லாடிய மக்கள் பல கிலோமீற்றர் தூரம் சென்று குடிநீரை எடுத்தனர். அத்துடன் பல இடங்களில் பணம் கொடுத்தும் வாங்கிக் குடித்தார்கள்.
மழையைப் பார்த்து வறட்சிக்கு முடிவு வருகிறது என்று மகிழும் வன்னி மக்கள் தாம் வசிக்கும் தற்காலிக கூடாரங்களை எண்ணி கவலை கொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். வன்னியில் மீள்குடியேற்றம் நடந்த பெரும்பாலான இடங்களில் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை. மக்கள் தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர்.
இந்த தற்காலிககூடாரங்கள் தறப்பாளினாலும் தகரங்களினாலும் அமைக்கப்பட்டவை. ஒரு சில மாதங்கள் வசிப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த கூடாரங்களில் மூன்றாவது ஆண்டு மழைக்காலத்திலும் வன்னி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பும் சுகாதாரமும் இல்லாத இந்தக் கூடராங்கள் கொடிய நோய்த்தோற்றுக்களை ஏற்படுத்தக்கூடியவை.
கடந்த மூன்று வருடங்களாக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை இதோ வழங்குகிறோம் என்று சொல்லி காலத்தைக் அரசு கடத்தி வந்தநிலையில் இப்பொழுது ஜனவரி மாதத்தில்தான் வீட்டுத்திட்டம் வரும் என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இழவு காத்த கிளியாக ஏமாந்த மக்கள் அடுத்த இந்த மழையை எப்படி எதிர்கொள்வது என்று திண்டாடத் தொடங்கியிருக்கின்றனர்.
வடக்கு மகாணசபைத் தேர்தலில் போட்டியிட அரசாங்கம் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை வன்னியில் ஆரம்பித்துள்ளது. முக்கியமாக அரசு ´வடக்கில் வசந்தம்´ என்று தெருவுக்குத் தெரு பெயர்ப்பலகை போட்டிருக்கும் நிலையில்தான் வன்னி மக்கள் காலாவதியான கூடாரங்களில் மூன்றாவது ஆண்டாகவும் பருவகால மழையை எதிர்கொள்ளுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply