புலிகளின் சிலர் அரசிடம் சரணடையப் போவதாக தெரிவித்திருக்கின்றனர்:பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க

புலிகள் இயக்கத்தின் சிலர் ஆயுதங்களை கீழே வைத்து அரசிடம் சரணடையப்போவதாக தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே அது புத்திசாலித்தனமான தீர்மானம். ஆயுதங்களைக் கீழே வைத்து ஜனநாயக வழிக்குத் திரும்பும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள எமது அரசு ஆயத்தமாக இருக்கிறது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத் திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் தொடர்ந்தும் பேசும்போது:-

புலிகள் மக்களை கேடயங்களாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் கருணையையும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்கிறார்கள். எந்தவொரு அழுத்தம் வந்தபோதும் மனிதாபிமான நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது.

புலிகள் இன்று போக்கிடமின்றி இருக்கிறார்கள். தங்களது உறுப்பினர்களையே கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாம் தான் என புலிகள் உலகத்துக்கு கூறினார்கள். ஆனால் தமிழ் மக்களினாலேயே ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சிலர் காடுகளில் ஒளிந்துகொண்டு இருக்கிறார்கள். மக்களை கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் கள்.

புலிகளின் சிலர் அரசிடம் சரணடையப் போவதாக ஊடகங்களினூடாக தெரிவித்திருக்கின்றனர். காலம்கடந்தாவதுயதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளமையும், புத்திசாலித்தனமாக செயல் என அரசு கருதுகிறது.

நாம் ஆரம்பத்திலிருந்து கூறியது போன்று ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயக வழிக்கு திரும்பும் எவரையும் ஏற்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.

நாட்டின் வளங்களை, சொத்துக்களை அழிக்கின்ற, மக்களின் உயிர்களை பலி கொள்கின்ற யுத்தத்திற்குச் செல்லாமல் ஜனநாயக ரீதியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே புலிகள் இன்று செய்ய வேண்டியுள்ளது.

மூன்று தசாப்தங்களின் பின்னராவது யதார்த் தத்தைப் புரிந்துகொள்வதற்கு புலிகளின் சிலர் முன்வந்திருப்பது மக்களின் நன்மைக்காகவே. அவ்வாறு யதார்த்தத்தை புரிந்துகொள்ளத் தவறும் பட்சத்தில் எந்தவொரு அழுத்தத்திற்காகவும் மனிதாபிமான நடவடிக்கையை அரசு நிறுத்தப்போவதில்லை.

எந்த சக்திக்கும் நாம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை நிறுத்திவிட முடியாது.

எந்தவொரு நாட்டுக்கும் சுயாதீனத் தன்மை இருக்கிறது. உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இருக்கவேண்டும். இதற்கு பங்காளியாக மற்றுமொரு தரப்பினரின் உதவியை நாடவும் முடியும். அன்று சுதந்திரத்திற்காக போராடியபோதும் ஆசிய நாடுகள் ஒற்றுமையுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டன. இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற நேரிட்டது. இன்றும் அதே நிலைமைதான்.

உலகத்திலேயே திறமையான படை எங்களுடையதென மார்தட்டிக்கொண்ட புலிகள் இன்று காட்டுக்குள் ஒழிந்துகொண்டுள்ளார்கள். படையினருக்கு பாடம் புகட்டுவோம் என்று கூறிய புலிகள் மக்களை கேடயங்களாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் எமது படை வீரர்களே.

களத்தில் நிற்கின்ற படையினருக்கும், உயிர்நீத்த, படுகாயமடைந்து இன்று ஊனமுற்ற படையினருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். எந்நேரமும் நன்றியுணர்வுடன் அவர்களை நினைவுகூரவும் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாவற்றுக்கும் மக்களின் ஆதரவே பக்கபலமாக எமக்கும் படையினருக்கும் அமைந்துள்ளது. படையினரின் ஒவ்வொரு வெற்றிக்கும் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவே பக்கபலமாக அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply