காணாமற் போனோரை கண்டறிவதற்கு மூன் உதவ வேண்டும் – உறவினர்கள் கோரிக்கை
இலங்கையில் கடத்தப்பட்டும் காணாமல்போயும் இருப்பவர்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து வெளியிடுவது தொடர்பில் ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் தங்களுக்கு உதவ வேண்டுமென்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் அரசாங்கத்தை விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளரும் கார்டூன் ஓவியருமான பிரகீத் ஏக்நலிகொட காணாமல் போய் ஆயிரம் நாட்கள் ஆவதைக் குறிக்கும் முகமாக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்கள் ஆகிவிட்ட போதும் ஏக் நலிகொட பற்றிய ஒரு விவரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
கொழும்பு ஐநா அலுவலகம் முன்பு திங்களன்று நடந்த ஆர்ப்பாட்ட கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஏக்நலிகொடவின் மனைவி மகனிடத்தில் சோகமும் விரக்தியும் காணப்பட்டது.
என் கணவர் எங்கே என்று மனைவியும் அப்பா எங்கே என்றும் மகனும் வேதனையுடன் கேட்டதைக் கேட்கமுடிந்தது
இவர்கள் மட்டுமல்லாது இலங்கையில் வேறு பலரும் காணாமல் போன தமது குடும்ப உறுப்பினர்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லாமல் தவித்துவருகின்றனர்.
காணாமல் போன தமது கணவன் அல்லது மகன் பற்றிய தகவல் வேண்டும் எனக் கேட்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் வேறு 15 பேரும் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஆட்கள் காணாமல் போகும் அவலத்தை முடிவுக்கு கொண்டுவருவதிலும்இ காணாமல் போனவர்களின் நிலை பற்றி உண்மையைக் வெளிக்கொண்டுவருவதிலும் முன்னேற்றம் காணப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐநாவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
‘பல்லாண்டு காலமாகத் தொடரும் அவலம்’
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் பாதுகாப்புப் படையினரால் கொண்டுசெல்லப்பட்டு காணாமல் போனவர்கள் இவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் 1980கள் முதலே இலங்கையில் பலர் கடத்திக்கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போவதென்பது அரங்கேறி வந்திருப்பதாகறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர் நிமால்கோ ஃபெர்னாண்டோ தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும் என குரல்கொடுத்துவந்த இரண்டு இளம் ஆர்வலர்கள் கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன நிலையில் குடும்பத்தார் நடத்தும் இப்படியான ஆர்ப்பாட்டங்கள் குறைந்துபோயிருந்தன.
ஆனால் ஆட்கடத்தல்கள் என்பதும் ஆட்கள் பலவந்தமாக கொண்டுசெல்லப்படுவது என்பதும் ஆட்கள் காணாமல் போவது என்பதும் இலங்கையில் இன்றளவும் நீடித்துவரவே செய்கிறது.
கொழும்பின் புறநகர்ப் பகுதி ஒன்றில் இருந்து தனது கணவர் வெள்ளை வான் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக போன ஞாயிற்றுக்கிழமைகூட ஒரு பெண் புகார் தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply