பாடகி சின்மயியின் முறைப்பாடு குறித்து அதிரடி நடவடிக்கை

ட்விட்டர் போன்ற இணையதள சமூக சந்திப்பு மேடைகள் வழியாக பிரபல திரைப்படப் பிண்ணணிப் பாடகி சின்மயி குறித்து அவதூறாக செய்தி பரப்பினார், அவருக்கும் கடும் மன உளைச்சலைக் கொடுத்தார் என்ற புகாரில் நிஃப்ட் எனப்படும் சென்னை நாகரிக ஆடைகளுக்கான கல்லூரிப் பேராசிரியர் சரவணகுமார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சின்மயியின் புகாரின் பேரில் சென்ன மாநகர காவல்துறையின் கணினி குற்றப் பிரிவினர் சரவணகுமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண்களைத் தொந்திரவு செய்வது தொடர்பான சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழும் சின்மயிக்கு மிரட்டல் விடுத்ததாக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்குக்கள் பதிவாயிருக்கின்றன.

இணைய தள சந்திப்பு மேடைகள் வாயிலாக பாலியல் தொந்திரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவர் கைதாவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது,

இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் சின்மயி செய்த சில பதிவுகளுக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அதன் தொடர்விளைவாக மோதல் முற்றியதாகத் தெரிகிறது.

இப்பின்னணியில் ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக சின்மயி அண்மையில்தான் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சின்மயிஇ’சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

‘இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி ஆறு பேர் கொண்ட கும்பல் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

அதிலும் என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்’என்றார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் கைதான சரவணகுமாருக்கு நெருக்கமானவர்கள் இணையதளத்தில் கடுமையாக கருத்துக்கள் பரிமாறப்படுவது வழமையே, இதைத் தேவையில்லாமல் சின்மயி பெரிதுபடுத்திவிட்டார், அவர் பிரபலமானவர் என்பதாலேயே இப்படிக் கைது நடவடிக்கை எனக் குறைகூறுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply