பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிப்பாளர் விமலராஜ் தெரிவித்தார்.  கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பலவற்றைப் பெறுவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 26 ஏக்கர் காணி இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக காணி சீர்த்திருத்த ஆணைக்குழு தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவினால் பொதுமக்களிற்கு வழங்கப்பட்ட காணி உரிமப் பத்திரங்களைத் யுத்த காலத்தில் தொலைத்தவர்கள் மீண்டும் உரிமப் பத்திரங்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்காக வாக்காளர் அடையாள அட்டை, குறித்த பகுதியில் வசித்ததை உறுதிப்படுத்தி கிராம அலுவலர், பிரதேச அலுவலர் ஆகியோரின் கடிதங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றோடு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் யாழ் பிராந்தியத்துடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்குரிய உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply